சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் எஸ்பிஐ வங்கிக் கிளையில், கடந்த 2019ஆம் ஆண்டு விஷ்ணுகுமார் என்பவர் வீட்டு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். விஷ்ணுகுமார், தான் fore cross என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மாதம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபோர் கிராஸ் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஐஸ்வர்யா மற்றும் கோபாலகிருஷ்ணனிடம் சான்றிதழ் வாங்கியுள்ளார். அதில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஷ்ணுகுமார் கோயம்பேடு காம்ப்ளக்ஸில் வீடு வாங்க உள்ளதாகவும், பில்டர் சந்தோஷ் என்பவரிடம் இருந்து 82 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வீடு வாங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சான்றிதழில், விஷ்ணுகுமார் தங்கள் நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சான்றிதழை சரிபார்த்த வங்கி அலுவலர்கள் விஷ்ணுகுமாருக்கு 82 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கடனாக வழங்கி உள்ளனர். கடன் தொகையை பில்டர் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.
வீட்டுக் கடன் பெற்ற விஷ்ணுகுமார் மாதந்தோறும் கடன் தவணையை கட்டாமல் தலைமாறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவரைத் தேடி, அவர் கொடுத்த முகவரிக்கு சென்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் சான்றிதழில் கொடுத்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமும் இல்லை, விஷ்ணுகுமார் என்ற ஊழியரும் அங்கு இல்லை. அதேபோல் பில்டர் சந்தோஷ் குமார் என்று குறிப்பிடப்பட்டவர் பில்டரே இல்லை என தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கி அலுவலர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, மோசடி செய்தவர்கள் கைது செய்யப்படவும் இல்லை.
இதனால் வங்கி அலுவலர்கள் அண்மையில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஷ்ணுகுமார், சந்தோஷ் குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து, திட்டம் தீட்டி வங்கியை ஏமாற்றிவிட்டு தலைமறைவானது அம்பலமானது. போலியாக நிறுவனம், போலியாக ஊழியர், போலியாக சம்பள ரசீது, போலி பில்டர் என உருவாக்கி வீட்டுக் கடனை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், பில்டர் என நாடகமாடிய சந்தோஷ்குமாரை நேற்று(மார்ச்.9) கைது செய்தனர். மேலும், இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த விஷ்ணுகுமார், ஐஸ்வர்யா, கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர். வங்கிகள் போட்டி போட்டு வீட்டுக் கடன்கள் வழங்குவதை சாதகமாக பயன்படுத்திய இந்த கும்பல் திட்டமிட்டு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளது.