சென்னை: குலேபகாவலி, ஜாக்பட் போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ’80-ஸ் பில்டப்’ இத்திரைப்படத்தில் கதநாயகியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார்.
மேலும் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சந்தானம், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், கல்யாண், ஜிப்ரான், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு சந்தானம் பேசுகையில், "எல்லோருக்கும் திரைப்படம் வெளியாகும் போது ஒரு பயம் வரும். அப்படி பயம் வரும் சூழலில் என் உடன் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. இப்ப வரும் நிறைய படங்களில் 80ஸ் பாடலை போட்டு ஹீரோவுக்கு பில்டப் வைக்கின்றனர்.
அது போல நாமும் 80ஸ் படம் எடுத்து அதுக்கு பில்டப் என்று பெயர் வைக்கலாம் என தயாரிப்பாளர் யோசித்து இருப்பார் போல, ஞானவேல் ராஜா என்னை வைத்து இயக்கிய 3 படங்களுக்கும் மிகப் பெரிய சம்பளம் கொடுத்தார். அதை வைத்து தான் முதல் முதலில் நிலம் வாங்கினேன். கல்யாண் படப்பிடிப்பின் போது இது படப்பிடிப்பு தளமா இல்லை பிக்பாஸ் வீடா என்ற குழப்பம் இருக்கும்.
அத்தனை கேமரா வைத்து படம் எடுப்பார். ஆனால் குவாலிட்டி மிஸ் ஆகாமல் எடுத்துள்ளார். ஜிப்ரான் இசையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தில் நிறைவேறி உள்ளது. இப்படத்தில் காமெடியுடன் சேர்த்து காதலும் உள்ளது. இது 80ஸ் காலகட்டத்தை போன்று எடுக்கப்பட்டுள்ளது அதனால் லாஜிக் பார்க்காமல் படம் பாருங்கள்" எனப் பேசினார்.
முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேகையில், "கேஎஸ் ரவிக்குமார் உடன் பயணித்த போது நிறைய கற்றுக்கொண்டேன். என்னுடைய முக்கியமான நலம் விரும்பி அவர். இந்தியில் நான் முதல் முறையாக தயாரிக்கப் போகும் படத்தை இயக்குநர் கௌரவ் இயக்குகிறார். இது அவருக்கே தெரியாது இதற்காக அறிவிப்பு விரைவில் வரும்.
சந்தானத்தின் அறிமுகமும், எனது அறிமுகமும் ஒரே கட்டத்தில்தான். எனது முதல் படமான சில்லுனு ஒரு காதல் படத்தில் சந்தானம் கலக்கியிருப்பார். சந்தானத்தின் வளர்ச்சி என்னுடைய வளர்ச்சியாக பார்த்து மகிழ்ந்து வருகிறேன். மேலும் சில்லுனு ஒரு காதல் படத்துக்காக சந்தானத்துக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தேன். தற்போது ’80-ஸ் பில்டப்’ படத்துக்கு 3 கோடி கொடுத்தேன். 30 கோடி கொடுக்கும் அளவுக்கு அவர் வளர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்காக இலவச திருமண மண்டபம் கட்டும் ராகவா லாரன்ஸ்!