சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் மேல் படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் தவிர, 80 சதவீதம் பேருக்கு வேலை பெற்று தரப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 16 உறுப்புக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணாப் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு, மருத்துவப்படிப்பிற்கு பல மாணவர்கள் செல்வதால் ஏற்படும் காலி இடங்கள் மற்றும் கலந்தாய்வில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தினால் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 16 உறுப்புக்கல்லூரிகளில் திருச்சி, கோயம்புத்தூரில் கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கிறது. மற்றக் கல்லூரிகளில் தனியார் கல்லூரியை ஒப்பிடும் போது வசதிகள் சற்று குறைவாக உள்ளன என்பது ஒப்புக்கொள்ள கூடியது.
நடப்புக் கல்வியாண்டில் ரூ.36 கோடி நிதியில் கட்டமைப்புகளை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கு திறன்மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கவும் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், 16 உறுப்புக்கல்லூரியில் காலியாக உள்ள 400 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் 4 வளாக கல்லூரிகளில் தற்பொழுது 350 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
7 துறைகளில் நியமனம்செய்வதற்கான நேர்காணல் பணிகள் முடிவடைந்துள்ளது. பிறத்துறைகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களில் நியமிக்கப்படுவார்கள். இந்த பணிகள் முடிந்தப்பின்னர் உறுப்புக்கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதத்தில் நிரப்பப்பட உள்ளது. உட்கட்டமைப்பு, விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டால், கல்வியின் தரம் உயருவதற்கு வாய்ப்புள்ளது.
அண்ணாப் பல்கலைக் கழகத்தைவிட தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துள்ளனர் என்பது தவறானதாகும். அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரியில் பல்வேறுத்துறைகள் இருக்கிறது. தற்பொழுது மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் மட்டும் கேட்பதால், அங்கீகாரம் பெற்றக் கல்லூரிகளில் சதவீதத்தில் முதலில் நிரப்புவதாக தெரிகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் கிண்டி பொறியியல் கல்லூரி தான் முதலில் இருக்கும். அதேபோல் தான் தற்பொழுதும் இருக்கிறது.
வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தான் அதிகளவில் இருக்கிறது. 1 லட்சம் வேலை வாய்ப்பில் 80 சதவீதம் கம்ப்யூட்டர் துறையில் இருக்கும். பிறத்துறையிலும் வேலை வாய்ப்புகள் இருக்கும். கம்ப்யூட்டர் பிரிவில் ஆரம்பத்தில் வருவாய் அதிகமாக இருக்கும்.
ஆனால் பிறத்துறைகளில் வருவாய் தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டர் பிரிவில் தொடர்ந்து வளர்ச்சி இருக்குமா? என்பதை கூற முடியாது. மெக்கானிக்கல் எடுத்தவருக்கு முதலில் வருவாய் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வருவாய் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து விட்டு பிறப் படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்தாண்டை போல் நடப்பாண்டில் அதிகளவில் இருக்காது. பொறியியல் படிப்பில் சேர்ந்தப் பின்னர் மருத்துவப் படிப்பிற்கு 100 மாணவர்கள் செல்ல வாய்ப்புகள் இருக்கலாம். கடந்தாண்டை போல் நடப்பாண்டில் இருக்காது.
பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரியில் காலியாக இருந்த இடங்களில் நடப்பாண்டில் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் 2ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் மேல் படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் தவிர, 80 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.