திபெத்தியர்கள்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு வருகிற 11ஆம் தேதி நடக்கிறது.
இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிறிது தூரம் நடந்து செல்கின்றனர். மேலும் ஐந்து ரதம் அருகே அமர்ந்து புகைப்படம் எடுக்கவுள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பல்லவ நகரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கைது
இந்த நிலையில் சீன அதிபர் தமிழ்நாடு வரும்போது அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த திபெத் நாட்டைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு காவல் துறையும் உஷார்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, சென்னை கிழக்கு தாம்பரத்தில் தங்கியிருந்த ஒரு பெண், இரண்டு மாணவர்கள் உள்பட எட்டு திபெத்தியர்களை கைது செய்தனர். அந்த எட்டு பேர்: யசி செர்பா, பால்டன் டோண்டப், ஜிக்மி டோண்யூ, டிசரிங் டோண்டப், டாசி லக்டண், கல்சங் கியாட்டா, ரிம்ஜின் சோடன், டென்சின் லாப்சங். இவர்களில் ஒருவர் சென்னை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவரும் மாணவராவார்.
நீதிமன்றக் காவல்
இதையடுத்து அவர்கள் எட்டு பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 18ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தலாய் லாமா விவகாரம்
இந்தியாவின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடுவது போல், திபெத் நாட்டிக்கும் சொந்தம் கொண்டாடுகிறது. இதனால் அங்குள்ள மதகுருமார்கள், அரசியல் தலைவர்கள் உயிர் பாதுகாப்பு கருதி பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அந்நாட்டின் தலைமை மதகுருவான தலாய் லாமா இந்தியாவில் புகலிடம் பெற்று வாழ்ந்துவருகிறார். சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக திபெத்தியர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்கலாமே
தலாய்லாமாவின் நீண்ட ஆயுளுக்கான சிறப்பு பிரார்த்தனை நிறைவு!
நெல்லையில் இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் குவிப்பு!