சென்னை: மலேசியா நாட்டில் மூன்றாவது சர்வதேச சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நெடுங்கொம்பு, இரட்டைக் கொம்பு, வாள் வீச்சு போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலம்பம் அசோசியேஷனைச் சேர்ந்த 16 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், பல்வேறு பிரிவுகளில் எட்டு தங்கப் பதக்கம், ஆறு வெள்ளிப் பதக்கம், நான்கு வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர். இதையடுத்து சென்னை திரும்பிய பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் சிலம்பம் அசோசியேஷன் மற்றும் மாணவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ஜெகதீசன், ''இந்திய நாட்டுக்காக வெளிநாடுகளில் சென்று சிலம்ப போட்டியில் தங்கப் பதங்களை வெல்ல வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கனவு. இதில், சென்னையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 16 மாணவ மாணவிகளும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அனைத்து பதக்கங்களையும் வென்று சாதனைப் படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தியாவுக்காக வெற்றிபெற்று சாதனைப்படைத்து சென்னைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தற்போது வெற்றி பெற்று நாடு திரும்பிய பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கமளித்து படிப்புக்குத் தேவையான செலவுகளை ஏற்றுக்கொண்டு உதவி செய்ய வேண்டும். இது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்துள்ளேன். ஆனால், இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. தமிழ்நாடு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மாணவர்கள் மேலும் வளர அது ஊக்கமாக இருக்கும்'' என்றார்.
தங்கப்பதக்கம் வென்ற மாணவி காயத்ரி கூறுகையில், ''சர்வதேச அளவில் போட்டிகளில் தங்களால் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இருந்தோம். ஆனால், காவல் துறை இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி உதவி செய்ததால் எங்களால் சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள முடிந்தது.
நான் தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் வந்த அனைத்து மாணவ மாணவிகளும் பதக்கங்களை வென்றுள்ளனர். போட்டி மிகவும் கடுமையாகத் தான் இருந்தது. ஆனால், இந்தியாவில் இருந்து சென்ற நாங்கள் தோல்வியே சந்திக்கவில்லை. தாங்கள் வெற்றி பெற முழுக்க முழுக்க பயிற்சியாளர்களே காரணம். இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வென்ற எங்களது கல்விக்கும், போட்டிகளுக்கும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? - கடையநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி!