சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) தொழில் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கிப் பேசினார்.
அப்போது, "தமிழ்நாடு பாரம்பரிய தொழில் செய்வதிலும், புதிய தொழில் தொடங்குவதிலும் முன்னோடியாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது. இறக்குமதி 9.84 விழுக்காடாகவும், ஏற்றுமதி 8.9 விழுக்காடாகவும் உள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொழில்துறை சிறப்பாக விளங்கியது.
தொழில் தொடங்க உகந்த மாநிலம்
தர்மபுரி, பெருந்துறை ஆகிய இடங்களில் ஒன்றிய அரசு ஜவுளிப் பூங்கா அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே தொழில் மிகுந்த, தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் (2030 ஆம் ஆண்டிற்குள்) 17 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, 46 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடமாவட்டங்களில் இரண்டு, மூன்றாம் நிலை நகரத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். கடந்த ஆட்சியில் இரண்டு முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் போதுமான முதலீடும் வரவில்லை, போதுமான இளைஞர்கள் வேலைவாய்ப்பும் பெறவில்லை.
எத்தனால் தொழிற்சாலை
மின்னணு மென்பொருள் உற்பத்தி, மின்சார வாகனங்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி தயாரிப்பிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
எட்டு புதிய தொழில் பூங்காக்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. வலிமை என்ற பெயரில் புதிய சிமென்ட் அறிமுகப்படுத்தப்படும். கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, இரண்டு எத்தனால் தொழிற்சாலை அமைக்கப்படும். ஒற்றைச் சாளர முறையில் எளிதாக வணிகம் செய்வதற்கு 24 துறைகளில் 100 புதிய சேவைகள் கொண்டு வர உள்ளன.
மீண்டும் செம்மொழி தமிழ் ஆய்வு விருது
அதேபோன்று தமிழ் வளர்ச்சித் துறையில், 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள செம்மொழி தமிழ் ஆய்வு விருதுகள் வழங்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கத் தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ் மொழி அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வலிமை சிமெண்ட்' - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு