சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான Frontier Business Pvt.Ltd.,என்ற நிறுவனத்தின் மண்டல மேலாளர் தினேஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அக்கவுண்ட்ஸ் மேனேஜர் பிரதாப் பசுப்புலேட்டி மற்றும் டெலிவரி பிரிவில் பணிபுரிந்து வந்த குமாரவேல் ஆகிய இருவரும் சேர்ந்து சுமார் 8 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 825 ரூபாய் மதிப்பிலான 1074 I-Phone மற்றும் 3- Apple Laptop ளை மோசடியாக வெளியாட்களுக்கு விற்றுள்ளதாகவும், நிறுவன பணத்தை கையாடல் செய்துள்ளது சம்பந்தமாக அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்திருந்தார். அதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
![ரூ.8 கோடி மதிப்புள்ள ஐபோன், மடிக்கணினி விற்பனை மோசடி வழக்கில் மூவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-iphonepackage-script-7202290_18112022153433_1811f_1668765873_827.jpg)
இந்நிலையில், வழக்கில் மத்திய குற்றப்பிரிவு ஆவண தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னல் மூலம் தேடப்பட்டு வந்த பிரதாப் பசுப்புலேட்டி(32) என்பவரை இமாச்சலம் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படையினர் தலைமறைவாக இருந்த பிரதாப் பசுப்புலேட்டி என்பவரை அவரது சொந்த ஊரான நெல்லூரில் சிக்னல் மூலம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
குறிப்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வாளர் சுமதி தலைமையிலான தனிப்படை பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதாப் வைத்திருந்த ஐபோன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் நெல்லூருக்கு பிரதாப் வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. ஆனால் சாலை மார்க்கமாகவோ, ரயிலிலோ அல்லது விமானத்தின் மூலமா என தனிப்படை போலீசாருக்கு தெரியவில்லை.
ஐபோன் சிக்னல்கள் செல்லும் வழியை பார்க்கும் பொழுது gt எக்ஸ்பிரஸ் மூலம் நெல்லூருக்கு வருவது போலீசாருக்கு உறுதியானது. இதனையடுத்து ரயில்வே போலீசார் உதவியுடன் பிரதாப்பை மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட பிரதாப் பகப்புலேட்டி அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குமாரவேல்,(44), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ்வரலு(61) , ஆகியோரையும் கைது செய்தனர்.
![ரூ.8 கோடி மதிப்புள்ள ஐபோன், மடிக்கணினி விற்பனை மோசடி வழக்கில் மூவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-iphonepackage-script-7202290_18112022153433_1811f_1668765873_118.jpg)
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கைதான பிரதாப் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பிஎஸ்சி பட்டதாரியான பிரதாப் ஏழ்மை நிலையை அறிந்து இந்த நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளனர். ஐந்து வருடமாக நிறுவனத்தில் பணிபுரிந்த பிரதாப், பலரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தில் நிறுவனம் தொடர்பான முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ப்ராண்டியர் நிறுவனத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள், பிரதாப் ஐபோன் விற்பனை செய்த நிறுவனங்களுக்கு சென்றுள்ளனர். அப்போதுதான் இல்லாத போலி நிறுவனத்திற்கு போலியாக ஆவணம் தயாரித்து ஐபோன்களை விற்பனை செய்தது போன்று மோசடி செய்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக iphone கள் வாங்கும் வாடிக்கையான நிறுவனங்கள் பெயரை சிறு மாற்றம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக நிறுவனங்களுக்கு ஐபோன்கள் விற்பனை செய்யும் போது 90 நாட்களுக்குள் விற்பனை செய்த ஐபோன்களின் பணத்தை செலுத்த வேண்டும். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலியான நிறுவனங்களுக்கு,கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 1074 ஐபோன்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக கணக்கு காட்டியுள்ளார்.
ஆனால் அந்த 1074 iphone களையும் வெங்கடேஷ்வரலு என்ற தரகர் மூலமாக சென்னையின் பல்வேறு கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அந்த ஐபோன்கள் அனைத்தையுமே பில் இல்லாமலும், குறைந்த விலைக்கு பலரிடம் விற்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
![ரூ.8 கோடி மதிப்புள்ள ஐபோன், மடிக்கணினி விற்பனை மோசடி வழக்கில் மூவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-iphonepackage-script-7202290_18112022153433_1811f_1668765873_309.jpg)
நிறுவனத்தில் மோசடி செய்த ஐபோன்கள் விற்கப்பட்ட தொகையை ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை சம்பாதித்து மீண்டும் நிறுவனத்தில் செலுத்தி விடலாம் என பிரதாப் செயல்பட்டதும் தெரியவந்தது.
fair play,10cric10,Games war Casinoplay ஆகிய நான்கு ஆன்லைன் சூதாட்ட இணையதளத்தில் மோசடி செய்து சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சூதாடியது தெரியவந்தது. குறிப்பாக roulette என்ற விளையாட்டில் அதிகம் விளையாடி பணத்தை இழந்துள்ளதாக ப்ரதாப் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆன்லைன் இணையதளத்தில் இவ்வாறு சூதாடியதன் மூலம் மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை சம்பாதித்ததால் மேலும் ஆசை அதிகரித்துள்ளது.
இதனை அடுத்து நிறுவனத்தில் இருந்து ஐபோனை மோசடி செய்து பெற்ற 8.30 கோடி ரூபாய் பணத்தை ஆன்லைன் இணையதள சூதாட்டத்தில் மொத்தமாக இழந்துள்ளார். போட்ட பணத்தை மீட்பதற்காக பேராசையில் ஆன்லைன் விளையாட்டில் சம்பாதித்த மூன்றரை கோடி ரூபாய் பணத்தையும், அதே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி தோற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவயதில் இருந்து சூதாட்டத்திற்கு பிரதாப் அதிக அளவில் அடிமையாக இருந்ததாகவும், ஆன்லைனில் சூதாட்டம் வந்த பிறகு தான் சம்பாதித்த பணத்தை சூதாட்டத்தில் இழந்து வந்ததாகவும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில் தெரிய வந்துள்ளது. கடந்த ஏழு மாதத்தில் சுமார் 8 கோடி ரூபாய் அளவில் பிரதாப் மோசடி செய்திருந்தால், கடந்த ஐந்து வருடமாக பிரதாப் இந்த நிறுவனத்தில் பணி புரிந்த போது எவ்வளவு பண மோசடி செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதாப் தலைமறைவான காலத்தில் செலவிற்காக அவரது மனைவி நாற்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்திலும் பெரும்பாலும் ஆன்லைன் இணையதள சூதாட்டத்தில் விளையாடி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதாப் மோசடியாக விற்ற 1074 ஐபோன்களின் ஐ எம் இ ஐ நம்பர்களை வைத்து யார் யாரிடம் அந்த செல்போன் உள்ளது என்ற பட்டியலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளனர்.
பில் இல்லாமல் வாங்கிய அந்த அனைத்து ஐபோன்களையும் மீட்பதற்கான நடவடிக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரதாப் மோசடியில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த விற்பனை பிரதிநிதி குமாரவேல் என்பவரும் உடந்தையாக செயல்பட்டதன் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவயதில் இருந்து சூதாட்டத்தில் அடிமையானதால் ஆன்லைன் சூதாட்டம் வரும்போது மேலும் அடிமையானதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை வைத்து விளையாடாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்பதால் தான், கொடுத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து தற்போது இந்த நிலையில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏழ்மையாக இருந்து ஒரு நிறுவனத்தில் வளர்ந்து நம்பிக்கையை பற்றி கை நிறைய சம்பாதித்து மனைவியுடன் சந்தோஷமா வாழும் பிரதாப்
ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமை ஆகியதால் வாழ்க்கையே இழந்து தவிக்கும் சோகம் நிகழ்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.