சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காணாமல் போன தமிழ்நாடு சிலைகளை இணையதளம் மூலமாகவும், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் தேடி சிலைகளை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி உடையார் என்பவர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலில் 13 பழங்கால சிலைகள் இருந்ததாகவும், முகலாயப் பேரரசர் காலத்தில் கோயில் இடிக்கப்பட்டபோது சிலைகள் சிதறியதாகவும், அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு முதல் பழங்கால முருகன் சிலை திருடப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மூன்று சிலைகள் 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது. இந்த சிலைகள் 10 கோடி மதிப்பு வாய்ந்தவை. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த 3 சிலைகளை சென்னையில் உள்ள ஒரு வீட்டில் கண்டறிந்து மீட்டதை அறிந்து தற்போது புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தடயம் என்ற பத்திரிகையில் முருகன் சிலை தொடர்பான போட்டோவை ஆதாரமாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த பத்திரிகையில் வந்த முருகன் சிலை போட்டோவை அடிப்படையாக வைத்து காணாமல் போன பழங்கால முருகன் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக, அந்த புகைப்படத்தை வைத்து இணையதளத்திலும், ஏற்கனவே மீட்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிலைகள் இருக்கும் இடங்களிலும் முருகன் சிலை உள்ளதா என தேடி வந்தனர்.
இந்நிலையில், அந்த பழங்கால முருகன் சிலை அமெரிக்காவில் ஹோம் லான்ச் செக்யூரிட்டி வசம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசு முருகன் சிலையை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.564 கோடி மோசடி வழக்கு: கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் ஜாமீன் மனு தள்ளுபடி !