சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு மெட்ரோ பணிகள் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனவரி 20, 22 மற்றும் 24-ம் தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி இரண்டு ஒத்திகைகள் நடைபெற்று முடிந்தன. இன்று மூன்றாம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் முப்படை வீரர்கள், காவல் துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து துறை ரீதியான சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முதலாவதாக ஆளுநர், முதலமைச்சர் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வதுபோலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.
இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 2000-த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மெரினா கடற்கரை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறும் தினங்களிலும் குடியரசு தின விழா அன்றும் மெரினா கடற்கரை பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுகிறது. இந்த இறுதி ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தலைமை செயலர் இறையன்பு பார்வையிட்டார்.
பின்பு சீருடை பணியாளர்கள், சமூக பணியாளர்கள் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும், பதக்கங்களும், காசோலையும் வழங்குவது போல் ஒத்திகையானது நடைப்பெற்றது. கடந்த 2 ஆண்டுகள் கரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம், காவடியாட்டம் பொய்க்கால் ஆட்டம், பிற மாநில நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. நாட்டுபுற கலைஞர்களும் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. அதை தொடர்ந்து துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் 21 ம் கலந்துகொண்டன.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்ந்த இரண்டு வாகனங்கள், காவல் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, பொதுத் தேர்தல்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வனத்துறை, இருந்து சமய அறநிலையத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிடெட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஆகிய துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை பயனாளிகளுக்கு வழங்கும் முறை குறித்து சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது.