சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாரதத்தின் 74ஆவது ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உளப்பூர்வமாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியத் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
இந்த நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம்.
தீரன் சின்னமலை, புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி, அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம்.
இந்நாளில் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரை இழந்த மற்றும் சொல்ல முடியாத சித்ரவதைகளை அனுபவித்த துணிச்சலான வீர மகன்கள் மற்றும் மகள்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. நம் தாய் திருநாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவர்கள் தங்கள் ரத்தம், வியர்வை மற்றும் தியாகங்களால் பாதுகாத்தனர்.
இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியது” என்றார்.
இதையும் படிங்க: உயிரைத் தந்து தமிழ்த்தாயை காத்தவர்கள் நாங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்