சென்னை: நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலை, காந்தி சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார்.
குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல்முறையாகும், இதற்காக சரியாக 7:52 மணியளவில் விழா நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து 7:54 மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்.
![73வது குடியரசு தின விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14284712_rsss.jpg)
அவரை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று முப்படைத் தளபதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை அறிமுகம் செய்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து சரியாக 8 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
![73வது குடியரசு தின விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14284712_r.jpg)
முப்படை அணிவகுப்பு மரியாதை
அதன் பின்னர் முப்படையினர் அணிவகுப்பு, முப்படையை பிரதிபலிக்கும் மாதிரி ஊர்திகள் அணிவகுப்பு, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ஆர்பிஎப், காவல்துறை, தீயணைப்பு படை, தொடர்ந்து காவல்துறையின் இருசக்கர வாகன அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.
இதனையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்
அந்த வகையில் இந்த ஆண்டு வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, விழுப்புரம் மாவட்டம் தீயணைப்போர் மூ.ராஜீவ்காந்தி, கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன், சிவகங்கையை சேர்ந்த முத்துகிருஷ்ணன், திருச்சியைச் சேர்ந்த மாஸ்டர் லோகித், திருப்பூர் சொக்கநாதன் , திருப்பூர் பேச்சியம்மாள் , திருவொற்றியூர் மு.தனியரசு ஆகியோருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட 2022 ஆம் ஆண்டின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
![வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14284712_rsa.jpg)
இதனையடுத்து, கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரபிக்கு வழங்கப்பட்டது. திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கான நெல் உற்பத்தி திறப்புக்கான நாராயணசாமி நாயுடு விருது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இராமசாமிக்கு வழங்கப்பட்டது.
விருது வழங்கிய முதலமைச்சர்
![73வது குடியரசு தின விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14284712_rss.jpg)
இதனைத் தொடர்ந்து காந்தியடிகள் காவல் பதக்கம் சென்னை வடக்கு மண்டல காவல் துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, வேலூர் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மா.குமார், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பா.சக்தி, திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம் , காஞ்சிபுரம் மாவட்டம் அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் அசோக்பிரபகாரன், ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
![73வது குடியரசு தின விழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14284712_rs.jpg)
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு நகர காவல் நிலைய ஆய்வாளர் பிச்சையிடம் முதல் பரிசிற்கான கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இரண்டாவது இடத்தை திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஹேமமாலினியிடம் கோப்பையை வழங்கினார். மூன்றாவது இடத்தை மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் சாதுரமேஷ்யிடம் மூன்றாம் பரிசுக்கான கோப்பையை முதலமைச்சர் வழங்கினார்.
![அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் அணிவகுத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-republicday-livebagvisual-7209106_26012022083453_2601f_1643166293_541.jpg)
அலங்கார ஊர்திகள்
டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் நடக்கும், குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தில், அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று 4 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றது.
இதனையடுத்து, டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 4 அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பில் அணிவகுத்து வந்தது.
அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
மங்கள இசை ஊர்தி - தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்களின் இசையில் நாதஸ்வர ஊர்தி, இசைக்கு நடன நயம் புரிபவர்கள் சுதா ஸ்வர்ணலட்சுமியின் பரத நாட்டியக் குழுவினர் அடங்கிய அணிவகுப்பு ஊர்தி இடம் பெற்றது.
முதல் ஊர்தி : சிப்பாய் புரட்சியைப் போற்றும் வகையில் வேலூர் கோட்டை, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், அழகு முத்து கோன், ஆகியோர் உருவங்கள் அடங்கிய அணிவகுப்பு ஊர்தி இடம் பெற்றது.
இரண்டாவது ஊர்தி : பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, விஜய ராகவாச்சாரியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய அணிவகுப்பு ஊர்தி இடம் பெற்றது.
மூன்றாவது ஊர்தி : தந்தை பெரியார் , பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், ராஜாஜி, வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, ரெட்டை மலை சீனிவாசன், திருப்பூர் குமரன், வ.வே.சு ஐயர், காயிதே மில்லத், ஜெ.சி.குமரப்பா ஆகியோர் உருவங்கள் அடங்கிய அணிவகுப்பு ஊர்திகள் இடம் பெற்றன.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், மாநில அரசு, மத்திய அரசு மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கோவிட் பெருந்தொற்றை இந்தியா எதிர்கொண்ட விதம் பெருமைளிக்கிறது - குடியரசுத் தலைவர் உரை