சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய வங்கிகளிடமிருந்து ரூ.3,986 கோடி பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் கடனாக 1,301.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் 1,495.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தும் கடன் பெற்றுள்ளது.
ஆனால் இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை கடந்த மாதம் 12 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலை உட்பட 113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அலுவலர்கள் முடக்கியுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 2012 ஆம் ஆண்டு சட்ட விரோத தங்க ஏற்றுமதி விவகாரத்தில் சிபிஐ நடத்திய சோதனையில் 400 கிலோ தங்கம் சிக்கியது. பின்னர் சிபிஐ கட்டுப்பாட்டில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த தங்கத்தில், 103 கிலோ தங்கம் மாயமானது.
இது தொடர்பாக சிபிசிஐடி மற்றும் சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 1,500 கிலோ இறக்குமதி தங்கத்திற்கு முறையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை எனக்கூறி சுரானா நிறுவனத்தின் பெயர் இவ்வழக்கில் அடிபட்டது. அதேபோல் 250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி வழக்கிலும் சுரானா நிறுவனம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 4,000 கோடி ரூபாய் கடன் மோசடி விவகாரம்: நான்கு பேருக்கு நீதிமன்ற காவல்!