சென்னை: 2009ஆம் ஆண்டிற்கு முன்பு அரசு ஆரம்பப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை விட, 2009ஆம் ஆண்டிற்கு பிறகு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 3000 ரூபாய் அளவிற்கு குறைவாக வழங்கப்படுகிறது.
ஒரே நிலையில், ஒரே கல்வித் தகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இரண்டு வகையான சம்பளம் வழங்கப்படுவதை களைய கோரி, இடைநிலை பதிவு அமைப்பு ஆசிரியர் சங்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், 2000-க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். வளாகம் முழுவதும் ஆசிரியர்கள் குவிந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் நிலையில், 7 பேர் மயக்கமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிய உள்ள நிலையிலும் கோரிக்கை ஏற்கப்படாததால், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என்றும், கோரிக்கை ஏற்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்?