சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வாயிலாக ஏழை, கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது, தமிழ்நாடு அரசியலில் பல்வேறு வார்த்தை போர்களுக்கு வழி வகுத்தது.
இறுதியாக, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. இருப்பினும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இந்த நிலையில், இன்று(நவ.6) மருத்துவ படிப்பில் தமிழ்நாடு அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள தடை நீங்கியுள்ளது.
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை...
மாா்ச் 21: அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வழிவகை செய்வதற்கு, உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என, பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
ஏப்ரல் 14: உள் இட ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவு.
ஜூன் 8: நீதிபதி கலையரசன் 10 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையுடன் அறிக்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரில் அளித்தாா்.
ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை.
செப். 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தாா்.
அக். 5: உள் இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்திப்பு.
அக். 20: உள் இட ஒதுக்கீடு கோரி ஆளுநருடன் 5 பேர் கொண்ட அமைச்சா்கள் குழு சந்திப்பு.
அக். 21: உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்.
அக்.22: அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் பதில் கடிதம்.
அக். 29: நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விழிவகை செய்வதற்கு சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
அக். 30: உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
நவ. 3: மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு.
நவ. 6 : உள்ஒதுக்கீடு அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு.