சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்த நடைமுறையின் அடிப்படையில், தற்போது தமிழகம் முழுவதும் சரக துணை காவல்துறைத் தலைவர்களாக (டிஐஜி) பணியாற்றி வரும் 2004 மற்றும் 2006 பேட்ஜ்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மண்டல காவல்துறைத் தலைவர்களாக (ஐஜி) பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், டிஐஜி ஜெயஸ்ரீ, காவல்துறை நிர்வாகப்பிரிவு டிஐஜியாக உள்ள சாமுண்டீஸ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஐஜியாக உள்ள லட்சுமி, சேலம் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள ராஜேஸ்வரி, உளவுத்துறை டிஐஜியாக உள்ள ராஜேந்திரன், வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள முத்துசாமி மற்றும் டிஐஜி மயில்வாகனன் ஆகிய 7 டிஐஜிக்களுக்கு ஐஜி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதேபோல, 2003ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்தவரும் தற்போது தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் என்.பிரியா ரவிச்சந்திரனை, ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவி உயர்த்த தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இதை அடுத்து மத்திய அரசு, பிரியா ரவிசந்திரன்-க்கு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஜி சைலேஷ் குமார் யாதவ் பதவி உயர்வை மறு பரிசீலனை செய்ய வைகோ கோரிக்கை..!