சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக உறுப்பினர் சுதர்சனம், எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாட்களாகிறது எனவும், அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பேசினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஆளுநர் இனி முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் உங்களுக்கு கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது ஏன் எனவும், சட்டம், தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானது எனவும் கூறினார். அதற்கு, தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகு ஆளுநரை நேரில் சந்தித்தோ, கடிதம் மூலமாகவோ அழுத்தம் கொடுத்தீர்களா என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சொன்னபிறகு, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி விடுதலை செய்ய தீர்மானம் போடப்பட்டு அனுப்பப்பட்டதாக விளக்கமளித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் 7 பேர் விடுதலையை அரசாங்கமே தீர்மானித்துக் கொள்ளலாம் என கூறியும் தற்போது அது ஆளுநரிடம் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தினார்.