சென்னை: மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு என்ற அட்டவணை உருவாக்கப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 'தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தெளிவாக இருக்கிறது. இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் கடந்த ஆண்டு குழுவை நியமித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோ டெக்னாலஜி (MSC bio technology) படிப்பில் 16ஆவது பிரிவில் சிறப்பு வகைப்பாட்டின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவு குறிப்பிட்ட விவரம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொடர்புகொண்டு, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
மத்திய அரசின் நிதியைப் பெற ஒரு சில இடங்களில் நடைபெறும் இதுபோன்ற தவறுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளோம். இப்போது மீண்டும் சுற்றறிக்கையும் அனுப்ப உள்ளோம்.
கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட உள்ள நிலையில் முழு பாடத்திட்டங்கள் நடத்தப்படும். கூடிய விரைவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'ஸ்கூலுக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது, மீறி கொண்டுவந்தால் பறிமுதல் தான்' - அதிரடி காட்டிய அன்பில் மகேஷ்