சென்னை: தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (66) என்ற பெண் மீது, கடந்த 2018ஆம் ஆண்டு கிருஷ்ணாபுரம் போலீசார், கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்குதல், கலவரத்தை தூண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்வதற்காக தேடி வந்தனர். ஆனால் ஜெகதாம்பாள் போலீசிடம் சிக்காமல், அமெரிக்காவுக்கு சென்றதாக தெரிகிறது.
இதையடுத்து தருமபுரி மாவட்ட போலீசார் ஜெகதாம்பாளை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஜெகதாம்பாள் மீது லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டது.
இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெகதாம்பாள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து துபாய் வந்தாா். அங்கு இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இன்று (ஆக.28) காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், ஜெகதாம்பாளின் பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது, இவர் தருமபுரி மாவட்ட போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரை ஒரு அறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், தருமபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தருமபுரியில் இருந்து சென்னை வந்த தனிப்படை போலீசார் ஜெகதாம்பாள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:மது அருந்திக்கொண்டிருந்தவரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு