தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. கரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசிகள் இல்லாமல் பல இடங்களில் முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 51 பார்சல்களில் ஆறு லட்சத்து ஓராயிரத்து 630 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று (ஜூலை.15) சென்னை வந்தடைந்தன. தொடர்ந்து சென்னை விமான நிலைய அலுவலர்கள் தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்ந்து தடுப்பூசிகளை குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்துக்கு அலுவலர்கள் கொண்டு சென்றனா். அங்கிருந்து தமிழ்நாடு முழுவதற்கும் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’அத்தைக்கு மீசை முளைத்தால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ - கொங்கு நாடு விவகாரம் குறித்து ஜெயக்குமார்