சென்னை: மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர், இன்று (பிப்.8) கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடத்திய சோதனையில் 11 கிலோ ஆம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சரக்கு வாகனம் ஒன்றில், மிகப்பெரிய இயந்திரங்களைக் கொண்டு செல்வது போல, வாகனத்தில் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ரகசிய அறையில் போதைப்பொருளை பார்சல் செய்து மறைத்துக் கடத்தி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
6 பேர் கைது
இதில், பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னையில் 5 பேர் உட்பட மொத்தமாக 6 பேரை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்துவதற்கு பைனான்ஸ் செய்பவர்கள், போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் என்பது தெரியவந்தது.
இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள 'மோரே' என்ற இடத்திலிருந்து சென்னை வழியாக, இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
இலங்கைக்குக் கடல் வழியாக இந்த போதைப் பொருள் கடத்தப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கும்பல், கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை, தமிழ்நாடு, மியான்மர் ஆகியப் பகுதிகளில் தொடர் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சுமார் 8 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்டதை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் கும்பல்களுக்கு சர்வதேச அளவில் கிளைகள் இருப்பதும் தெரியவந்து உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர்!