தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. ஆனால், அதே சமயம் தற்போது குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. தொற்று பாதிப்பை குறைக்க மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தினந்தோறும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று மட்டும் சென்னை மாநகராட்சியில் 508 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில், அண்ணாநகரில் 66வது முகங்களும்,தேனாம்பேட்டையில் 54 மருத்துவ முகாம்களும் திருவிக நகரில் 52 மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற மருத்துவ முகாம்களில் மொத்தம் 28 ஆயிரத்து 119 நபர்கள் பரிசோதிக்கப்பட்டன.அதில், 1,788 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மே 8 ஆம் தேதி முதல் இன்று வரை நடைபெற்ற மொத்தம் 21 ஆயிரத்து 84 மருத்துவ முகாம்களில் 12 லட்சத்து 79 ஆயிரத்து142 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 42 ஆயிரத்து 743 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது