சென்னை: உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் மட்டுமின்றி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டது. 2020-2021 மற்றும் 2021-22 கல்வி ஆண்டில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வர முடியாமல் வீட்டிலிருந்தே படித்தனர். இதனால் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது.
கரோனா தொற்று பெரிதும் குறைந்த நிலையில் 2022- 23ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் நடப்பாண்டில் ஜூன் மாதம் முதல் வழக்கம் போல் தொடங்கப்பட்டன. மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்களை இயல்பாக தொடர்ந்து கற்கும் நிலைக்கு மாற்றும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாணவர்கள் பல்வேறு தேர்வுகளையும் நடத்தி தேர்வு எழுதுவதற்கான அச்சத்தை முற்றிலும் நீக்கி உள்ளது. கரோனா தொற்று பாதிப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேறு பணிகளுக்கு சென்ற மாணவர்கள் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை. இந்த மாணவர்களை கண்டறிந்து தேர்வினை எழுத வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்பு ஒன்றாக அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
தேர்வு எழுத வந்த மாணவிகள் கூறும் போது, ”தங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் அளித்த பயிற்சியினால் தேர்வினை எந்தவித அச்சமும் இன்றி எழுத உள்ளோம். கரோனா தொற்று காலத்தில் கற்றலில் விழுந்த இடைவெளியை மீட்கும் வகையில் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தேர்வுக்கு முன்பு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் தேர்வினை அச்சமின்றி எழுதுவோம்” எனத் தெரிவித்தனர்.
அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி கூறும் போது, ”பொதுத் தேர்வினை எழுத மாணவர்களுக்குத் தேவையான அளவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வினை எந்த வித அச்சமும் இன்றி எழுதுவார்கள். நீண்ட நாட்களாகப் பள்ளிக்கு வராத மாணவர்களையும் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின் படி கண்டறிந்து அவர்களைச் செய்முறைத் தேர்வு எழுத வைத்துள்ளோம். அவர்களும் தேர்வினை எழுத உள்ளனர்.மாற்றுத்திறனாளி மாணவர்கள் அரசின் வழிகாட்டுதலின் படி உரிய முறையைப் பின்பற்றி மருத்துவ சான்றுடன் முதன்மை கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் செய்து அதன் அடிப்படையில் தேர்வு எழுதச் சலுகை பெறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏப்ரல் 8 தமிழகம் வரும் பிரதமர் மோடி.. சிறப்பு பாதுகாப்புக் குழு சென்னை வருகை!