சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிந்தது. சட்டமன்றத்தேர்தலின்போது நிதி சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை இந்த அரசு அறிவித்திருந்தது.
அதில் ஒன்று 2.50 கோடி குடும்பப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அறிவிப்பு, மேலும் 55 அரசுத் துறை பணியாற்றிய 18 லட்சம் நபர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், அதே போல் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் போன்ற பல்வேறு பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் அறிவித்தார்கள்.
தற்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பியதால், குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 7000 கோடி ரூபாய் நிதியை 1000 ரூபாயாகப் பிரித்தால் 58 லட்சம் குடும்பப் பெண்களுக்கு, அதாவது ஐந்தில் ஒரு பகுதி பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் சென்றடையும்.
இதிலிருந்து பார்த்தால் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டார்கள் என்று தான் அர்த்தம். கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சி முடியும் தருவாயில் நிறைவேற்றினாலோ அல்லது நிறைவேற்றத் தவறினாலோ ரம்மி, சீட்டு மோசடி போல அதுவும் ஒரு மோசடியாக கருதப்படும். எனவே, திமுக அரசு கொடுத்த வாக்குறுதியின் படி 2.50 கோடி குடும்பப் பெண்களுக்கு இத்திட்டம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அரசு தமிழ்நாடு மக்களை கடனில் தள்ளியதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு குற்றம்சாட்டி இருந்தது. தற்போது பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கு திமுக அரசு 1 லட்சத்து 41 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளனர். அப்படி பார்த்தால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது முதல் இரண்டு கையெழுத்து நீட் தேர்வுக்கும், பூரண மதுவிலக்குக்கும் போடுவதாகச் சொன்னார்கள். ஆனால், தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி வரை டாஸ்மாக்கில் ஊழல் நடைபெறுகிறது. டாஸ்மாக் மூலம் பணம் எடுத்து பல்வேறு திட்டங்கள் செய்தாலும் அந்த திட்டங்கள் முழுமை பெறாது.
டாஸ்மாக் முறையாக நடைபெறவில்லை. நேரடியாக அரசு மதுபானக்கடையில் இருந்து பார்-க்கு மதுபானங்கள் செல்கிறது. ஒரு பார்-க்கு அனுமதி வாங்கி அதன் மூலம் 2,3 பார்-கள் நடத்தி மோசடி செய்து வருகின்றனர். இதனால் வரி கட்டாமல் ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் செய்யும் அனைத்து பணமும் ஒருவருக்கு மட்டும் நேரடியாக செல்கிறது. ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறுகிறது. மத்திய புலனாய்வுக் குழு அமைத்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்லி மதுபானக் கொள்கையை விட தமிழ்நாட்டில் மோசமாக உள்ளது. சூது, கஞ்சா என அனைத்து வகையிலும் தமிழ்நாடு இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். காகிதம் இல்லாத பட்ஜெட் என்பது போல குறிக்கோள் இல்லாத ஒரு பட்ஜெட்டாக இது உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்திற்கு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு!