சென்னை: சென்னை அண்ணா நகர் மண்டலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னறிவிப்பின்றி பணியை விட்டு நிறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கிட்டத்தட்ட 20,000 ஒப்பந்த தொழிலாளர்கள் மாநகராட்சி கீழ் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் உள்ள 7 மண்டலம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனம் புதிதாக தூய்மை பணியாளர்களை எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மண்டலம் 14க்கு மாநகராட்சி ஆணையர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மண்டலம் 14-ல் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களில் தேவையான பணியாளர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் மண்டலம் 4,5,6,8 மற்றும் 15 க்கு அனுப்ப வேண்டும் எனவும், அதற்கு இணையாக தற்காலிக தொழிலாளர்களைக் குறைக்கவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செயல்முறை ஜனவரி 9ஆம் தேதி முதல் நடைபெற வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மண்டலம் 14-ல் பணிபுரிந்த சுமார் 300க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களை மண்டலம் 8-க்கு மாற்றியுள்ளனர். இதனால் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னறிவிப்பின்றி பணியை விட்டு மாநகராட்சி நிறுத்தியுள்ளது.
பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் கூறும்போது, ,"நாங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறோம். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். நேற்று இரவு தொலைபேசியில் தொடர்புகொண்டு நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர். இன்று நாங்கள் நேரில் கேட்டால் நீங்கள் யார் என்று எங்களை பார்த்து மாநகராட்சி அலுவலர் கேட்கிறார். இந்த கரோனா சமயத்தில் எங்களை பணியை விட்டு எடுத்தது எங்களுக்கு வேதனையாக உள்ளது. நாங்கள் இதை உயர் அலுவலரிடம் தெரிவித்திருக்கிறோம். மாநகராட்சி ஆணையர் நேரில் பேசவுள்ளதாக அந்த அலுவலர் தெரிவித்தார்" என்று கூறினார்.
இன்னும் 4 மண்டலங்கள் அந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கபோவதாகவும், இதனால் சுமார் 10,000 ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து நிறுத்தப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தனிநேரம் ஒதுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்