சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் எட்டு இருசக்கர வாகனங்களை எரித்த வழக்கில் 52 வயது மதிக்கத்தக்க நபரை கடலூரில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை அம்மணியம்மாள் தோட்டம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக, புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாததால் வாகனங்களில் தீ வைத்த நபரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே அம்மணி அம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரது மனைவி காவல் நிலையத்தில் வேறொரு புகார் அளித்திருந்தார். அதில் தனது கணவரின் தந்தை மது போதையில் செல்ஃபோன் அழைப்பில் தங்களை மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து காவல் துறையினர் செல்ஃபோன் பதிவுகளை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், தனக்கு பிடிக்காதப் பெண்ணை திருமணம் செய்ததால் தான் வாங்கிக் கொடுத்த இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை ஏற்றக்கூடாது என்றும் ஒருவேளை மீறி ஏற்றினால் அந்த வாகனத்தை எரித்து விடுவதாகவும் அருணை அவரது தந்தை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் கடலூர் விரைந்து அருணின் தந்தை கர்ணனிடம் விசாரணை செய்தனர். அதில் கர்ணன் தான்தான் எரித்ததாக உண்மையை ஒப்புக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் தனது மகனின் இருசக்கர வாகனத்தை மது போதையில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அருகில் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த மற்ற இருசக்கர வாகனங்களையும் எரித்துவிட்டதாகவும் கர்ணன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது