சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிப்படி, சென்னை நகர எல்லைக்குள் புதிதாக வீடு கட்ட வேண்டுமென்றால் அதற்கு சிஎம்டிஏ-வின் திட்ட அனுமதி பெற வேண்டும். மேலும், ஏற்கனவே கட்டிய வீடு அல்லது கட்டிடங்களிலிருந்து இன்னும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களை உயர்த்த வேண்டும் என்றாலும், இதன் அனுமதியை பெற வேண்டும்.
இதேபோல சென்னை அல்லாத தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இந்த விதியை பின்பற்ற வேண்டுமென்றால் நகரத் திட்ட இயக்ககம் (டிடிசிபி) அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த நிலம், வரைபடம் சிஎம்டிஏ அல்லது டிடிசிபியால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இதற்கு வரைபடம், நில உரிமையாளர்கள் சிஎம்டிஏ அல்லது டிடிசிபியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு, அலுவலர்கள் விண்ணப்பித்த இடங்களில் போதுமான விதிகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்வது வழக்கம்.
இது குறித்து தெற்கிந்திய கட்டுமான நிறுவனங்கள் சங்கத்தின் துணை தலைவர் ராமபிரபு கூறுகையில், "கடந்த ஜனவரி முதல் சுமார் 5ஆயிரம் விண்ணப்பங்கள் சிஎம்டிஏ அலுவலகத்தில் தேங்கி நிற்கின்றன.
மேலும் சிஎம்டிஏ அலுவலர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய முடியவில்லை" எனத் தெரிவித்தார். மேலும், `கரோனா இரண்டாவது அலை அதிகமாக இருப்பதால், தற்போதும் இது மாதிரி விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய இயலாது` எனவும் தெரிவித்தார்.
இது குறித்து சிஎம்டிஏ அலுவலர் ஒருவர் இரண்டு காரணங்களை முன் வைத்தார். "கரோனா பெருந்தொற்றால் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யாமல் நிலுவையில் உள்ளது. இரண்டாவதாக, தேர்தல் முடிவுக்குப்பின் விண்ணப்பங்கள் செய்தவர்களின் நிலங்கள் அல்லது திட்டவரைவை ஆய்வு செய்வோம்" எனத் தெரிவித்தார்.