சென்னை: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜடேஜா பாரத்சிங் (28). இவர் கடந்த 6 மாதங்களாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மேன்ஷனில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாடோஸ் சாலையில் ஐடி கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக பட்டாளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (ஏப்.13) அந்த இளம்பெண், நிறுவனத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது, ஜடேஜா பின் தொடர்ந்து கழிவறை சுவரின் மீது ஏறி இளம்பெண்ணை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட இளம்பெண், உடனடியாக கூச்சலிட்டு, தனது தந்தை மற்றும் உறவினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் இளம்பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் நிறுவனத்திற்குச் சென்று மேனேஜர் ஜடேஜாவை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றனர். இதில், படுகாயமடைந்த ஜடேஜாவை அருகிலிருந்த நபர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜடேஜா அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்கிய பெரம்பூரைச் சேர்ந்த பச்சையப்பன் (49), சசிகுமார் (43), யேசுதாஸ் (36), சுந்தர்ராஜன் (48), அன்பு (61) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Shalu Shammu: ஷாலு ஷம்முவின் 2 லட்ச ரூபாய் செல்போன் மிஸ்ஸிங்.. நண்பர்கள் மீது சந்தேகம் என கேஸ்!