சென்னை: கோயம்பேடு சாஸ்திரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பணியாற்றுபவர் பாஸ்கர். இவர் நேற்று இரவு தனது பணியை முடித்துவிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்காக கொடுக்க வைத்திருந்த 8 லட்ச ரூபாயை தனது பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரும் பணம் கேட்டு அவரை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக தெரிகிறது. பின்னர் கோயம்பேடு மற்றும் அரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம்மில் நான்காயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, பொங்கல் பணம் வைத்திருந்த பையை பரிசோதனை செய்த பாஸ்கர் எட்டு லட்ச ரூபாய் பணத்தில் 5.15 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக, பாஸ்கர் கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பொங்கல் பரிசுடன் ஓட்டம் பிடித்த ரேஷன் கடை ஊழியர்!