சென்னையில் கரோனா தொற்று வட சென்னை பகுதிகளில் குறைந்தது. தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. அந்தவகையில், நேற்று (செப் 19) 449 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 47 மருத்துவ முகாம்களும், அண்ணா நகரில் 43 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன
இந்த 449 மருத்துவ முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 824 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 962 நபர்களுக்கு வைரஸ் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கேற்ற மருந்துகள் வழங்கப்பட்டன. மே 8ஆம் தேதி முதல் நேற்று(செப் 19) வரை மொத்தம் 49, 237 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதில் 25,60,890 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.