சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சுற்றுப்புறப்பகுதிகளான மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார்கோயில்பதி மற்றும் தானிக்கண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், ஈஷா மையத்தைச்சுற்றி வணிக நிறுவனங்கள் நடத்தியும் ஈஷா மையத்தில் பேட்டரி வாகனங்கள் இயக்குவது போன்றப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நான்கு மலைக் கிராம பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 41 பேர் தங்களது சொந்த பணத்தில் முதன்முறையாக கோவையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தனர். இவர்களை ஈஷா மைய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அழைத்து வந்தனர். சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி, இருந்து சுற்றிப்பார்த்துவிட்டு, கோவைக்கு ரயிலில் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பழங்குடியின மக்கள், “ஈஷா யோகா மையத்தைச் சார்ந்தே எங்களது வாழ்வாதாரம் இருக்கிறது. ஈஷா மையத்தில் பணி செய்தும், வணிக நிறுவனம் நடத்தியும் வருமானம் ஈட்டி வருகிறோம்.
தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ள நிலையில், எங்களது சொந்த வருமானத்தில் விமானத்தில் முதல்முறையாக பயணித்தது மகிழ்ச்சி தருகிறது. சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்களைச்சுற்றிப்பார்த்து விட்டு ரயில் மூலம் கோவை திரும்ப உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் - ஜக்கி வாசுதேவ்