சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா விற்பனை அதிகரித்துவருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், 06.12.2021 முதல் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 1.0 மற்றும் 2.0 என்ற பெயரில் காவல்துறை சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் மூலம் 13,320 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25,295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அவர்கள் பயன்படுத்திய 1,743 இருசக்கர வாகனங்களும், 148 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே போல 36,875 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு, 521 டன் குட்கா மற்றும் 618 இருசக்கர வாகனங்களும், 487 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மற்றும் குட்கா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் 4,023 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 616 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வேட்டை 12.12.2022 அன்று முதல் தொடங்கப்பட்டது. இந்த வேட்டையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CCTV: பெட்ரோல் போட வந்தவரை தாக்கிய பங்க் ஊழியர்