சென்னை: வியாசர்பாடி சாஸ்திரி நகர், பிவி காலனி, எருக்கஞ்சேரி உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த 10ஆம் தேதி இரவு பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தியுடன் வலம் வந்து ஐந்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை வெட்டிவிட்டு, பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர். காயமடைந்த பொதுமக்கள் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மடிப்பாக்கம் செல்வம் மற்றும் வில்லிவாக்கம் ராஜேஷ் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த நபர்கள் என்பதும் மாமூல் தர மறுத்ததால் பயத்தை காட்டுவதற்காக பொதுமக்களை அச்சுறுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து புகார் அளித்து பல மணி நேரங்கள் ஆகியும் அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்யாமல் இருந்து வந்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரச்சனை ஏற்படக்கூடும் என நுண்ணறிவு பிரிவு போலீசார் காவல் துறையை எச்சரித்தும் கோட்டைவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நேற்று எம்.கே.பி நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
ரவுடிகளுக்கு மாவுகட்டு: இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான வியாசர்பாடியை சேர்ந்த ஜீவா, அபிஷேக், திலீப், முரளிதரன் ஆகிய நான்கு பேரை வியாசர்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடிகள் ஹெல்மெட் அணிந்தபடி ஆயுதங்களால் வாகனங்களை அடித்து நொறுக்கும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் மாமூல் கொடுக்காத நபர் யார் என்பது தெரியவர வேண்டும் எனக்கூறி ஆத்திரத்தில் கத்தியால் வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் செல்கின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அபிஷேக் மற்றும் ஜீவா ஆகியோருக்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுபோதையில் ஆம்புலன்சுக்கு போன் செய்த கணவரை வெளுத்து வாங்கிய மனைவி!!