சென்னை: கரோனா ஊரடங்கின்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டன. அப்போது வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன் மூலம் ஆஜரான போது தனக்கு முன்பு இருந்த கேமரா 'ஆனில்' இருப்பதை தெரியாமல் உடனிருந்த பெண்ணுடன் ஆபாசமாக நடந்துகொண்டார்.
இதை ஆன்லைனில் ஆஜராகியிருந்த மற்றொருவர் தன் செல்ஃபோனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோவை கண்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து எடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதன்படி சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணனை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு, வீடியோ காட்சியில் இடம்பெற்றிருந்த பெண்ணுக்கு இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்று வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர் இன்று (ஏப்.06) இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பரத கலைஞர் ஜாகிர் உசேன் மீதான பாலியல் புகார் - விசாகா கமிட்டி விசாரணை