சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'சிகரங்களை நோக்கி' என்ற நிகழ்ச்சி இன்று (அக்.20) நடைபெற்றது.
சமூக ஆர்வலர் ஜி.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பொன்னம்பல அடிகளார், திமுக மாவட்டச் செயலாளர் இளைய அருணா, சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர், அரசு கலைக்கல்லூரி முதல்வர் கே. சுடர்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "ஒருவர் வரலாறு படைக்க வேண்டுமென்றால், அதற்கான கட்டமைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தேவை. அரசியல் களமாக இருந்தாலும் சரி, வேறு எந்த களமாக இருந்தாலும் உழைக்க களம் அமைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் நான்கு கல்லூரிகள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு 'கலாம்' விருது வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையும் படிங்க: கொலை செய்ய சொன்னால் கொன்றுவிடுவீர்களா...? - எஸ்.பியிடம் உயர் நீதிமன்றம் காட்டம்