சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 18 ஆயிரத்து 816 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 37 நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கும் என 39 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 48 லட்சத்து 23 ஆயிரத்து 404 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34 லட்சத்து 53 ஆயிரத்து 390 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 26 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 109 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக 21 நபர்களுக்கும்; செங்கல்பட்டில் 6 நபர்களுக்கும்; வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும்; காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என 39 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், ஐஐடியில் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 12 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மையமாக மாறுமோ என்ற அச்சத்தில் அங்கு பணியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.