சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 306 என குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 35 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 29 ஆயிரத்து 841 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பைக் கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மேலும் 35 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
35 பேருக்குப் புதிதாக கரோனா: தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 332 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனால் 34 லட்சத்து 52 ஆயிரத்து 825 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 306 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த 51 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 404 என உயர்ந்துள்ளது.
மேலும், கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் ஒருவரும் இறக்கவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என பழைய நிலையே தொடர்கிறது. கரோனா வைரஸ் தொற்று, சென்னையில் 17 நபர்களுக்கு என குறைந்துள்ளது.
ஆனால் கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தில் தலா நான்கு நபர்களுக்கு என அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும் நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என முப்பத்தி ஐந்து நபர்களுக்குப் புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு