சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டில் தமிழக காவல்துறையில் 46 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தமிழக காவல் துறையினர் தெரிவித்த தகவலில், 2023ஆம் ஆண்டில் மட்டும் தமிழக காவல்துறையில் பல்வேறு காரணங்களால் 313 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு 337 காவலர்களும், 2021ஆம் ஆண்டு 417 காவலர்களும், 2022ஆம் ஆண்டு 283 காவலர்களும் உயிரிழந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் ஒரு காவலர் கொலை செய்தும், 55 காவலர்கள் விபத்திலும், 59 காவலர்கள் மாரடைப்பிலும், 145 காவலர்கள் உடல்நிலை சரியில்லாமல் என மொத்தம் 313 பேர் உயிரிழந்துள்ளனர்.
போலீஸ் வேடம்..பத்தாயிரம் யூரோ டாலர் திருட்டு: எழும்பூரைச் சேர்ந்தவர், ரியாசுதீன். தனியார் அலுவலகத்தில் பணப் பரிமாற்ற ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், அவரது நண்பருக்கு கொடுப்பதற்காக பத்தாயிரம் யூரோ டாலரை (இந்திய மதிப்பில் - 9 லட்சத்து 11 ஆயிரத்து 569 ரூபாய்) எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எழும்பூர் கூவம் சாலையில், போலீசார் ரியாசுதீனை வழிமறித்து சோதனை மேற்கொண்டு, அவரிடம் இருந்த பத்தாயிரம் யூரோ டாலரையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, ரியாசுதீன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரித்த நிலையில், காவல் அதிகாரிகள் எந்த சோதனையும் நடத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ரியாசுதீன், வாகனம் மற்றும் பத்தாயிரம் யூரோ டாலர் திருடப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், போலீஸ் உடை அணிந்த மர்ம கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கணவரை கொலை செய்த மனைவி: நுங்கம்பாக்கம், வைகுண்டம்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் காவலாளியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் மது அருந்திவிட்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் அதிகமாக மது அருந்திவிட்டு, அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரது மனைவி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், சுவரில் மோதிய பாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்த அவரது மனைவியின் மீது, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடித்து கொடுமைப்படுத்திய கணவரை தற்காப்புக்காக கனகவள்ளி தள்ளிவிட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் விசாரணையில் தற்காப்புக்காக தள்ளியது உறுதியானதால், சட்டப் பிரிவு 100-இன் கீழ் விடுவிக்க, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ் மோதி சாஃப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழப்பு: கோயம்பேடு அருகே ஆம்னி பேருந்து மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூர், ராஜா குப்பம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், கோயம்பேட்டில் இருந்து திருவேற்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், கீழே விழுந்த கலையரசன் மீது ஆம்னி பஸ் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கலையரசன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இறந்தவரின் உடலை மீட்ட கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நண்பரை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு: வேலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!