சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2021-22ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு விரும்பிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களில் தகுதியான 313 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற 83 கல்லூரிகளில் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயில்வதற்கான ஒதுக்கீடு ஆணைகளை துணைவேந்தர் கௌரி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கௌரி, "சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி சட்டத்தில் பயில்வதற்கு தகுதியான 313 மாணவர்களுக்கு 83 கல்லூரிகளில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாக இதன் மூலம் வழங்கப்படும். மேலும், மாணவர்கள் அந்தக் கல்லூரியில் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விடுதிக் கட்டணம் இருந்தால் அதனையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.
இந்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் தங்களது திறமை வளர்ப்பதற்காக அளிக்கப்படும் அனைத்துப் பயிற்சிகளும் இந்தச் சட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைதூரப் படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்