சென்னை: பிராட்வே பிடாரியார் கோயில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பழமை வாய்ந்த சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பமீலா இம்மானுவேல் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, பழமைவாய்ந்த தட்சிணாமூர்த்தி சிலை ஒன்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து வீட்டில் தீவிரமாக தேடியபோது பழமைவாய்ந்த 8 சிலைகள் ரகசிய இடத்தில் மறைத்து வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். 9 சிலைகளுக்குண்டான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த சிலைகளை பறிமுதல் செய்தனர்.
![பழமை வாய்ந்த சிலைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16005413_i.png)
சட்டவிரோதமாக சிலைகள் வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் பமீலாவிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவரான இம்மானுவேல் பினீரோ என்பவர் பழங்கால சிலைகளை வெளிநாட்டில் விற்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. கடந்த 2001ஆம் ஆண்டு இம்மானுவேல் இறந்த பிறகு, அவர் கடத்தி வைத்திருந்த 9 சிலைகள் வீட்டிலேயே மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
![சிலைகள் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16005413_imgg.jpg)
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிலைகள் கடத்தப்பட்டது குறித்தும், எந்த கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 9 சிலைகளில் 7 சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தவை எனவும் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என சிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளியில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூன்று பேர் கைது