சென்னை: 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில் விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விடைத்தாளில் மதிப்பெண்களை கூட்டி போட்டதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் தவறு செய்துள்ளனர். குறிப்பாக வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும், குறைத்து மதிப்பெண்களை ஆசிரியர்கள் பதிவிட்டுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு செய்முறைத் தேர்வில் 30 மதிப்பெண்கள் என மொத்தம் 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர் விடைத்தாளை சோதித்தபோது, பாடத்தில் 67 மதிப்பெண்கள் வந்துள்ளது. இதில் செய்முறை தேர்வில் பெற்ற 30 மதிப்பெண்களைக் கூட்டினால், அம்மாணவர் 97 மதிப்பெண்களை வேதியியல் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள், அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் தவறான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். அதேபோல் இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், விடைத்தாள் பெற்று சோதித்த பிறகு அம்மாணவர் 82 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
அந்தவகையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை கூட்டிப் போட்டதில் தவறிழைத்த ஆசிரியர்களை அரசு தேர்வுத்துறை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு மொத்தம் 300 ஆசிரியர்களிடம், மதிப்பெண்களை கூட்டி போடுவதில் தவறு செய்ததற்காக நேரில் விசாரணை நடத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து தவறிழைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் பரிந்துரை செய்யவுள்ளது. மேலும், மதிப்பெண் வழங்குவதில் தவறு இழைத்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுக்கும் என பெற்றோர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்