சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் கல்பேஷ் (39) என்பவர் நடத்திவரும் நகைப்பட்டறையில் ஏழு பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் சுஜீத்குமார் என்பவர் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இவரிடம் திருமண ஆர்டர் தொடர்பான 300 கிராம் (38 சவரன்) நகைகளை செய்ய வேண்டும் என்று நேற்றிரவு கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது பட்டறையில் சுஜீத்குமார் இல்லாததையடுத்து, சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது நகைகளுடன் சுஜீத்குமார் வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கல்பேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரியமேடு காவல் துறையினர், தப்பியோடிய குற்றவாளியை வலைவீசித் தேடி வருகின்றனர்.