சென்னை: கிண்டியில் இருந்து முகலிவாக்கம் வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக ராமாபுரம் மவுண்ட் சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே ஒரு குடோனில் இரும்பு தளவாடங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி இரவு இந்த குடோனில் இருந்த இரும்பு ராடுகள், லாரி ஜாக்கிகள் உள்பட இரும்பு தளவாடங்கள் திருடப்பட்டன.
இது குறித்து இந்த மெட்ரோ பணிகளில் ஈடுபட்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் சேஷாத்ரி (31) ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ராமாபுரம், ராயலாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர்கள் இரும்பு பொருட்களைத் திருடி மினி வேனில் ஏற்றி கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் ராயலாநகர் போலீசார் அந்த மினி வேன் பதிவு எண்ணை வைத்து, சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு தாங்கல் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (20), மாங்காடு அடுத்த கொளுத்துவான்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் (22), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி கருமாரி அம்மன் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து திருடிச் சென்ற இரும்பு பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் திருட்டுக்குப் பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டேக் டைவர்சன்..! சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா..?