வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மூன்றாயிரத்து 850 இந்தியா்கள், கடந்த நான்கு நாள்களில் 30 விமானங்களில் சென்னை திரும்பினா். அதேபோல் இங்கிருந்து 12 விமானங்களில் ஆயிரத்து 234 இந்தியா்கள் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு சென்றனா்.
சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த 31ஆம் தேதியிலிருந்து நேற்று (செப்.5) 42 சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஐந்தாயிரத்து 84 பயணிகள் பயணித்துள்ளனா்.
அமெரிக்கா, லண்டன், பாரீஸ், துபாய், குவைத் ,அபுதாபி, சாா்ஜா, மஸ்கட், தோகா, ரியாத், இலங்கை, தென்கொரியா உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு இந்த நான்கு நாள்களில் 30 விமானங்கள் இயக்கப்பட்டன.
அதில் கடந்த ஐந்து மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மூன்றாயிரத்து 850 இந்தியா்கள் சென்னை திரும்பினா். அவா்களில் சுமாா் இரண்டாயிரம் போ் மருத்துவ சான்றிதழ்களுடன் வந்ததால், அவா்கள் குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடிந்து, கைகளில் முத்திரை குத்தப்பட்டு நேரடியாக வீடுகளில் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்பட்டனா்.
மற்ற பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன்பின்பு அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்பட்டனா்.
அதேபோல் சென்னையிலிருந்து 12 விமானங்கள் இந்த நான்கு நாட்களில் அமெரிக்கா, லண்டன், பாரீஸ், துபாய், அபுதாபி, சவுதி அரேபியா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றன. என்ஆர்ஐ (NRI), காா்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள், வெளிநாடுகளில் வேலைகளுக்கான பணி நியமனம் பெற்றவா்கள் உள்ளிட்ட ஆயிரத்து 234 இந்தியா்கள் இவ்விமானங்களில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
மத்திய அரசின் சிறப்பு அனுமதி, அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அனுமதியையும் பெற்று இவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.