கரோனா பாதிப்பு இருப்பினும் பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது.
முக்கியமாக மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நாளை (செப்டம்பர் 7) முதல் மாவட்டத்திற்கு இடையே பேருந்துகளும், சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரயில்கள், மாவட்டத்திற்கு இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் மாநிலத்திற்கு இடையே இயக்குவதற்கு மூன்று சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்திற்கும், திருச்சியிலிருந்து ஹௌராவிற்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த மூன்றாவது நாள் காலை 6.30 மணி அளவில் டெல்லி சென்றடையும். மீண்டும் டெல்லியிலுருந்து புறப்பட்டு சென்னை ரயில் நிலையம் வரும்.
அதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.40க்கு புறப்படும் ரயில் இரண்டாவது நாள் காலை 11.45 மணி அளவில் மத்திய பிரதேசம் சாப்ரா ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமை என்று வாரம் இரு நாள்கள் இயக்கப்படும். அதே ரயில்கள் மீண்டும் திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமை சாப்ரா ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்தடையும்.
மேலும் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஹௌரா ரயில் நிலையத்திற்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை என வாரம் இருமுறை ரயில் இயக்கப்படவுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு இரண்டாவது நாள் அதிகாலை 3.10 மணி அளவில் சென்றடையும். இதே ரயில்கள் ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.