துபாயிலிருந்து ஏர் இந்தியாவின் மீட்பு விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தது. அதில், வந்த 124 பயணிகளையும் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அப்போது, ராமநாதபுரத்தை சோ்ந்த மீசா மரைக்காயா் (43), அலி அஞ்சை (39), புதுக்கோட்டை ஹபீப் அப்துல்லா (21) ஆகிய மூன்று பயணிகளும் முரண்பாடாக பதிலளித்ததால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் மூவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது மூவரின் உள்ளாடைகளிலும் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரிடமிருந்தும் ரூ.83.7 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 620 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மூவரையும் கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.