சென்னை விமானநிலையத்திற்குப் பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
அப்போது, துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஷாருகான் (24), முகமது ஜின்னா(30), அன்சாரி (42) ஆகிய மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த ரூ.24 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 564 கிராம் தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மேலும், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது கமரூதீன் (37) என்பவரிடமிருந்து ரூ.14 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 332 கிராம் தங்கத்தையும் அலுவலர்கள் கைப்பற்றினர்.
அதே போல், கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த ரத்னஸ்ரீ (34), சிவகங்கையைச் சேர்ந்த பஷீர் அகமது (35), ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுல்தான் சாகுல் அமீது (26), முகமது சதாம் உசேன் (29), சாகுல் ஹமீத் (60) ஆகிய 5 பேரின் உள்ளாடைகளைச் சோதனை செய்ததில் ரூ. 88 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 59 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்
இதனால், சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் ஒரே நாளில் 9 பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 27 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 955 கிராம் தங்கத்தைச் சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பல்லடத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம், நகைகள் கொள்ளை!