சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான ஊரடங்கு அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியாகராய நகர், புரசைவாக்கம் மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவது மாநகராட்சியின் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து கடந்த வாரம் மாநகராட்சியின் சார்பில் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகப்படியான மண்டல அமலாக்க குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக வளாகங்கள், அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை (ஜூலை.10) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.11) ஆகிய இரு தினங்களில் மட்டும் புரசைவாக்கம், தியாகராய நகர், ராயபுரம், பாடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் ஐந்து லட்சத்து 43 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மே மாதம் தொடங்கி நேற்று முன்தினம் (ஜுலை.15) வரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஆறாயிரத்து 668 நிறுவனங்களிடமிருந்தும், 33 ஆயிரத்து 208 தனி நபர்களிடமிருந்தும் மூன்று கோடியே 35 லட்சத்து ஆறாயிரத்து 790 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டாயிரத்து 13 மண்டபங்கள், ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 52 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை இரண்டு லட்சத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் இறையாண்மையில் தலையிட்டால் உங்கள் மொழியிலேயே பதிலடி- அமித் ஷா