சென்னை பழைய விமானநிலைய வளாகத்தில் சரக்கு விமான முனையம் உள்ளது. இங்கிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு செல்லும் தாய் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் இன்று அதிகாலை புறப்படத் தயாரானது.
அந்த சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்கு 15 பெட்டிகள் வந்திருந்தன. அதற்குள் கடல் நண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர், சரக்கு விமானத்தில் ஏற்றப்படும் அனைத்து பார்சல்களையும் பரிசோதித்து ஆய்வு செய்தனர்.
2,500 நட்சத்திர ஆமைகள்
அப்போது, அந்தப் 15 பார்சல்களை திறந்து பார்த்துபோது, அதற்குள் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தமாக 2,500 நட்சத்திர ஆமைகள் இருந்துள்ளன. இதையடுத்து, நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், அதனை சென்னை வேளச்சேரியில் உள்ள வன உயிரின காப்பகத்து அனுப்பி வைத்தனர்.

பார்சல்களில் இருக்கும் முகவரிகள்,போன் எண்கள் அனைத்துமே போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இவ்விவகாரம் குறித்து சுங்கத் துறையும், வனத் துறையும் இணைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆந்திராவில் பிடிக்கப்பட்ட ஆமைகள்
இந்த நட்சத்திர ஆமைகள் ஆந்திர மாநிலம் வனப்பகுதி சதுப்புநிலங்களிலிருந்து பிடித்து, சாலை வழியாக சென்னைக்கு கொண்டு வந்து சரக்கு விமானத்தில் தாய்லாந்து கடத்தவிருந்தது தெரியவருகிறது.
நட்சத்திர ஆமைகள் வழக்கமாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு தான் அதிகளவில் கடத்தப்படுவது வழக்கம். இவற்றை நட்சத்திர ஓட்டல்களில் இறைச்சிக்காகவும், ஆமை ஓடுகள் மூலம் அலங்கராப் பொருள்கள் தயாரிக்கவும், மருத்துவ குணமுடையதால் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். மேலைநாடுகளில் செல்வந்தா்கள் இதனை செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கின்றனர்.

இதன் காரணமாக, நம் நாட்டில் ரூ.10 லிருந்து ரூ. 50க்கு விலைபோகும் நட்சத்திர ஆமைகள், வெளிநாடுகளில் ரூ.500 லிருந்து ரூ.1000 வரை மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த 2,500 நட்டச்திர ஆமைகளும் சுமாா் ரூ.25 லட்சம் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தப் பார்சல்களை சரக்கு விமானத்தில் அனுப்ப பதிவு செய்த ஏஜென்சிகளிடமும், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் சுங்கத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காலில் விழுந்த விவகாரம்: கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம்!