சென்னை தி.நகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூரில்ஹக் (71). இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டில், இவரது மனைவி ஆயிஷா, ஆயிஷாவின் அக்கா மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் உள்ளிட்ட எட்டு பேர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அனைவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வந்தனர். நேற்று (செப்.30) மாலை நூரில் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், நூரில் அவரது மனைவி, மற்றும் உறவினர் மொய்தீன் ஆகியோரை கட்டிபோட்டு விட்டு, வீட்டிலிருந்த சுமார் 250 சவரன் தங்க நகைகள், 1 லட்சம் ரூபாய் பணம், 60 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர், வீட்டிலிருந்த ஹோண்டாசிட்டி காரையும் எடுத்துக்கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்திச் சென்று தி.நகரிலுள்ள தனியார் துணிக்கடை வாசலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்து நூரில் ஹக் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வீட்டில் நகை, பணம், கொள்ளையடித்த கும்பல் முஸ்தபாவை மட்டும் கடத்திச் சென்று விடுவித்துள்ளதால் பாண்டிபஜார் காவல் துறையினர், அவரிடம் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் தம்பதியிடம் கொள்ளை முயற்சி - ஒருவர் கைது!