குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 2019-20 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் பெற்றோர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது 1 ம் வகுப்பு) மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஆன்லைன் முலம் நிரப்ப பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்காக http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
இந்த முறை பள்ளியின் தூரத்திற்கும் மாணவர்கள் வீட்டிற்கும் உள்ள இடைவெளியை ஜிபிஎஸ் வரைப்படம் மூலம் இறுதி செய்துள்ளனர். அதில் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் முலம் விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு அவர்களின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார், குடும்ப அட்டை, நலிவடைந்தப் பிரிவினரில் விண்ணப்பிக்க ரூபாய் 2 லட்சம் வரையில் வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் இருந்தோ, தனியார் இணையதள சேவை மையங்களில் இருந்தோ விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த ஆண்டு மாணவர்களின் பெற்றோர்கள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் அதற்கான வழிமுறைகளையும் இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கைக்கு இடம் உள்ளது. ஆனால் நேற்று வரையில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. வரும் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.